disalbe Right click

Sunday, December 11, 2016

மனைவி - பாலியல் வன்முறை


மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால், பாலியலும் ஒரு வன்முறைதான்!
என்ன செய்ய வேண்டும்?
திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு, “அடங்கிப் போகணும். சின்னச் சின்ன விஷயங்களைப் பெரிசுப் படுத்தக்கூடாது. அங்கே இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கணும். நீ நல்லா வாழ்வதில்தான் நம்ம குடும்பத்தின் மானமே அடங்கியிருக்கு’’ என்றெல்லாம் அறிவுரை கூறி அனுப்பி வைப்பார்கள்.

அப்படித்தான் ரம்யாவுக்கும் கூறப்பட்டது. ரம்யா நல்ல நிறுவனத்தில் வேலை செய்துவருகிறாள். அவள் கணவன் சுரேஷுக்குத் தனியார் வங்கியில் மேலாளர் பணி. அவனின் பெற்றோரும் படித்து, நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.

தன்னை யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடந்துகொள்ளக்கூடியவள் ரம்யா. படித்து, வேலைக்குச் சென்றாலும் கூட ரம்யா ஒரு வகையில் கிணற்றுத் தவளைதான். இதுவரை எந்தப் பிரச்சினையும் சந்திக்காத, பாதுகாப்பான, அன்பான குடும்ப வளையத்துக்குள் மட்டுமே இருந்து பழகியவள்.

ரம்யாவும் சுரேஷும் ஒரு வாரத்தில் தேனிலவுக்குச் சிங்கப்பூர் சென்றார்கள். திரும்பி வரும்போது ரம்யா சந்தோஷமாக இல்லை. அடுத்தடுத்த மாதங்கள் ரம்யாவுக்கும் சுரேஷுக்கும் மகிழ்ச்சியின்றி கழிந்தன. 

குழந்தை தற்போது வேண்டாம் என்று சுரேஷ் கூறியதால், ரம்யா கவலை அடைந்தாள். ரம்யாவின் அம்மாவும் ஓராண்டு தள்ளிப் போடுவதில் தவறில்லை என்று கூறினார்.

“அம்மா, என் பிரச்சினை வேறு. சுரேஷுக்குப் பாலியல் நாட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. என்னால் அவருக்கு ஈடுகொடுக்க முடியலை. கர்ப்பமானால் ஒரு வருஷம் தப்பிச்சிடலாம்னு நினைச்சேன்” என்றாள் ரம்யா.

“சிலர் பாலியல் உறவில் அதிக ஆர்வமா இருப்பாங்க. சிலர் ஆர்வமே இல்லாமல், குறைவாக வச்சுப்பாங்க. இது அவரவர் இயல்பு. இதை எப்படித் தப்புன்னு சொல்லுவே? உன்கிட்ட அன்பாவும் பாசமாகவும் இருக்கும்போது, இது ஒரு குறையே இல்லை. புரிஞ்சுக்கம்மா” என்று அம்மா சொன்ன பிறகு, ரம்யாவால் ஒன்றும் பேச முடியவில்லை.

இரண்டு மாதங்கள் கழிந்தன. திடீரென்று அம்மா வீட்டுக்கு வந்து, 10 நாட்கள் தங்கப் போவதாகச் சொன்னாள் ரம்யா.

“தாராளமாக வந்து தங்கு ரம்யா. மாப்பிள்ளை கிட்ட பேசறேன். அவரையும் அழைச்சிட்டு வா” என்று அம்மா சொன்னவுடன், தான் வரவில்லை என்று கோபத்துடன் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள் ரம்யா.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன பிரச்சினை என்று தெரிந்துகொள்வதற்காக, ரம்யாவின் மாமியாரைச் சந்தித்தார்கள்.

“என்ன சொல்றதுன்னே தெரியலை சம்பந்திம்மா. ரம்யா என் மகனோடு மகிழ்ச்சியா இல்ல. தாம்பத்தியத்தை மறுக்கிறதால தினமும் ராத்திரி ரெண்டு பேருக்கும் சண்டை வருது. தனித்தனி அறைகளில் தூங்குறாங்க. சுரேஷ் கிட்ட கேட்டால், அது அவங்களோட தனிப்பட்ட பிரச்சினைன்னு சொல்லிட்டான். எனக்கும் ஒண்ணும் புரியலை” என்று வருந்தினார் மாமியார்.

அலுவலகத்திலிருந்து வந்த ரம்யாவிடம் விசாரணை நடத்தினார் அவள் அம்மா. 

நீலப் படங்களை விரும்பிப் பார்க்கும் சுரேஷ், ரம்யாவையும் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவான். ரம்யா பிடிக்கவில்லை என்று பார்க்க மறுத்தால், வார்த்தைகளால் துன்புறுத்துவான். அதுமட்டுமின்றி, அந்தக் காட்சிகளைப் போலவே தன்னிடம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துவான். நேரம் காலம் இல்லாமல், அவன் நினைக்கும்போதெல்லாம் உறவு வைத்துக்கொள்ள அழைப்பான். 

இதனால் நீலப் படங்கள் பார்க்கும் அந்த லேப்டாப்பையும் போனையும் கண்டாலே ரம்யாவுக்குப் பயம் வந்துவிடுகிறது. அன்பும் காதலும் இருக்கக்கூடிய தாம்பத்தியத்தில் தனக்கு உடன்பாடு இருக்கிறது என்றும், இயந்திரத்தனமாகத் தன்னை உறவுக்குப் பயன்படுத்துவதில் விருப்பம் இல்லை என்றும் அம்மாவுக்குப் புரியவைத்தாள் ரம்யா.

“எல்லாத்தையும் என் மாமியாரிடம் சொன்னேன். புருஷனுக்கு ஏத்த மாதிரி வாழறதுதான் ஒரு மனைவிக்கு அழகு. அவனுடைய ஆசைகளுக்கு வடிகாலாக இருப்பவள்தான் நல்ல மனைவின்னு சொல்லிட்டாங்க. கணவன் கொடுக்கும் பாலியல் தொல்லைகளை ஏன் யாருமே வன்முறையா பார்க்க மாட்டேங்கிறீங்க? தாலி கட்டிட்டார் என்பதற்காக அவர் செய்யும் அத்தனைக் கொடுமைகளையும் சகித்துக்கொள்ளத்தான் வேணுமா? இனியும் அவருடன் சேர்ந்து என்னால வாழ முடியாதும்மா” என்று உடைந்து அழுதாள் ரம்யா.

திட்டுவதும் அடிப்பதும் மட்டும் வன்முறையல்ல. 
பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதும் பிடிக்காத ஒன்றைக் கட்டாயப்படுத்திச் செய்யவைப்பதும் வன்முறைகள்தான். பெண்களைக் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தில், மேற்கண்ட எல்லாவிதமான செயல்களும் வன்முறைகளே. 

கணவனாக இருந்தாலும் பாலியல் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறையில் அடங்கும். இவற்றைச் சொல்லத் தயங்கி, தினமும் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் ஏராளமான பெண்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளை யாரும் கேட்பார்களா? ஏற்பார்களா? கணவனுக்கு விற்கப்பட்ட உடல் என்று பெண்ணைக் கருதுவார்களோ என்றெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. 

குடும்ப உறுப்பினர்கள் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவில்லை என்ற நிலை இருந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பாதுகாப்பு அலுவலரிடம் மனு கொடுக்கலாம். 

அந்த மனு பாதுகாப்பு அலுவலர் மூலம் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு வகையான நிவாரணங்களைப் பெறவும், தன்னை அந்த வன்முறைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் முடியும் என்பதை அறிந்தாள் ரம்யா.

கௌரவம் பார்த்துக்கொண்டு அன்றாடம் அல்லல்படுவதிலிருந்து மீண்டு வர, குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தை அறிந்துகொள்வதும், ஒவ்வோர் ஆணும் பெண்ணும் இதுவும் குடும்ப வன்முறைதான் என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.

கட்டுரையாளர், 
பி.எஸ். அஜிதாவழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 11.12.2016No comments:

Post a Comment